மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சூறையாடப்பட்டன
மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில், நேற்று, (ஆகஸ்ட் 4) குறைந்தது இரண்டு பாதுகாப்புச் சாவடிகளில், கலவர கும்பல் சூறையாடியதைத் தொடர்ந்து, தானியங்கி துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டன என்று தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் காவல்துறையின் கூற்றுப்படி, ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு கலவர கும்பல், பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் ஆயுதப்படை காவல்துறையின் இரண்டாவது பட்டாலியனின், கெய்ரன்பாபி போலீஸ் அவுட்போஸ்ட் மற்றும் தங்கலவாய் போலீஸ் அவுட்போஸ்ட் ஆகியவற்றை சூறையாடி ஆயுதங்களை கொள்ளையடித்துள்ளது. மேலும், ஹீங்காங் மற்றும் சிங்ஜமேய் காவல் நிலையங்களில் இருந்தும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அந்த கும்பல் கைப்பற்ற முயன்றபோது, பாதுகாப்பு படையினர் அவர்களின் தாக்குதலை முறியடித்ததாக கூறப்படுகிறது.
கலவரத்தை தொடர்ந்து அமைக்கப்பட்ட சோதனை சாவடிகள்
"கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரம் போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதால், மாநிலம் முழுவதும் தொடர்ந்து கொந்தளிப்பாகவும் பதட்டமாகவும் உள்ளது" என்று காவல்துறை அறிக்கை மேலும் கூறியது. மணிப்பூரில், கலவரம் பாதிக்கப்பட்ட இடங்களில் இதுவரை மொத்தம் 129 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விதிமீறல்கள் தொடர்பாக சுமார் 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இன மோதல்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மைதேயின் பட்டியல் பழங்குடியினர் (ST) அந்தஸ்து கோரிக்கையைத் தொடர்ந்து வெடித்த இந்த வன்முறையில்,நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.