ஜல்லிக்கட்டு வெற்றி விழாவினை கொண்டாடுவோம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை இன்று(மே.,18) உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.
அதன்படி தமிழக அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு அவசர சட்டம் செல்லும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு இனி தடை இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழர் தம் வீரத்தினையும் பண்பாட்டினையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்கது!
தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் செல்லும் என்பதனை நிலைநாட்ட அரசு நடத்திய சட்ட போராட்டத்திற்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்பதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் பதிவு
மேலும் அவர், அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தினை நாம் கட்டி வருகிறோம்.
வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இவரை அடுத்து இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி கே பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை வரவேற்கிறேன்.
இந்த வழக்கில் அதிமுக தன்னையும் மனுதாரராக இணைத்து கொண்டு எடுத்த அனைத்து சட்ட போராட்டங்களுக்கும் துணை நின்ற தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
ஓ. பன்னீர் செல்வம் அவர்களும் இத்தீர்ப்பினை வரவேற்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.