அண்ணாமலையுடன் எவ்வித தகராறும் இல்லை - எடப்பாடி கே பழனிச்சாமி பேட்டி
டெல்லியில் நேற்று(ஏப்ரல்.,26) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை எடப்பாடி கே பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை. அதிமுக-பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. எங்களுக்குள் தகராறு, பிளவு என நினைத்து அதிமுக-பாஜக கூட்டணியினை பிரிக்க சதி நடக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அவர், எல்லாத்தையும் கேட்டுவிட்டு அப்படியே செல்வதற்கு அதிமுக அடிமைக்கட்சி அல்ல. அந்தந்த கட்சிகளின் கொள்கைகளின் அடிப்படையில் அவரவர் செயல்படுகின்றனர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவில் இடமில்லை. எங்கள் தரப்பே அதிமுக என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது என்றும் கூறினார்.
விசாரணை நடத்த அமித்ஷாவிடம் கோரிக்கை
தொடர்ந்து பேசிய அவர், துரோகம் செய்தவர்களை தவிர மற்றவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்வோம் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து ஓபிஎஸ் மாநாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியினை வெற்றி பெற செய்வோம். ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக ஆடியோ விவகாரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். ஆனால் தற்போது அவரே அதனை புனையப்பட்ட ஆடியோ என்று கூறினால் எப்படி நம்ப முடியும்?. அதனால் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.