
கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்துவரும் நிலையில், அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்துள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இதனிடையே சென்னையில் தொடரும் மழை காரணமாக சென்னைவாசிகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் செம்பரப்பக்கம், புழல், சோழவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இன்றைய(நவ.,27)நிலவரப்படி, செங்குன்றத்தில் 3-செ.மீ.,மழையும், சோழவரத்தில் 5-செ.மீ.,மற்றும் கும்மிடிப்பூண்டியில் 5.6-செ.மீ.,மழை பதிவாகியுள்ளது.
இதனால் நேற்று(நவ.,26)செம்பரப்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 164 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 532 கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக 24 அடி உயரம் கொண்ட அணையில் இப்பொழுது 22.19 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இது முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில், அணையிலிருந்து உபரிநீர் திறந்துவிட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
அணை
குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 189 கனஅடி நீர் திறப்பு
இதனை தொடர்ந்து, 21.20 உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது வினாடிக்கு 281 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 18.89ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 16.05 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்த ஏரியில் தற்போது வினாடிக்கு 174 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 12 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 189 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
35 அடி உயரம் கொண்ட கும்மிடிப்பூண்டி ஏரியில் தற்போது 30.62 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், வினாடிக்கு 100 கனஅடி நீர்வரத்து உள்ளது. 162 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.