LOADING...
டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு: டாக்டர் உமர் 'ஷூ வெடிகுண்டு' தீவிரவாதியா?
டாக்டர் உமர் உன் நபி தனது Shoeவில் வெடிகுண்டை மறைத்து வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு: டாக்டர் உமர் 'ஷூ வெடிகுண்டு' தீவிரவாதியா?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2025
03:48 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பமாக, தற்கொலை போராளி டாக்டர் உமர் உன் நபி தனது காலணியில் (Shoe) வெடிகுண்டை மறைத்து வைத்துத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், வெடித்த காரில் மிக அபாயகரமான 'mother of Satan' எனப்படும் வெடிமருந்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெடிவிபத்து நடந்த இடத்தில், டாக்டர் உமர் ஓட்டி வந்த ஐ20 கார் அருகில் கண்டெடுக்கப்பட்ட தடயவியல் பொருட்கள் மற்றும் ஒரு காலணியை மையமாக வைத்து விசாரணை நகர்கிறது என இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

வெடிகுண்டு

காலணியில் மறைக்கப்பட்ட வெடிகுண்டு?

ஓட்டுநர் இருக்கைக்கு அடியில், வலது முன் டயருக்கு அருகே கண்டெடுக்கப்பட்ட காலணிக்குள் ஒரு உலோகம் போன்ற பொருள் இருந்தது. இது குண்டை வெடிக்கச் செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தக் காலணி மற்றும் கார் டயர் ஆகிய இரண்டிலும் அதிகத் தாக்குதிறன் கொண்ட TATP (Triacetone Triperoxide) வெடிமருந்தின் தடயங்கள் (Traces) கண்டறியப்பட்டுள்ளன. TATP வெடிமருந்து, அதன் அபாயகரமான தன்மை காரணமாக "சாத்தானின் தாய்"(Mother of Satan) என்று அழைக்கப்படுகிறது. காலணியில் வெடிமருந்தை மறைத்து தாக்குதல் நடத்தும் முறை, 2001ஆம் ஆண்டு ரிச்சர்ட் ரீட் என்ற "Shoe Bomber" விமானத்தில் தாக்குதல் நடத்த முயன்ற பாணியுடன் ஒத்துப் போவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். உமர் உன் நபியும் அதே நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பரிமாற்றம்

வெடிபொருள் மற்றும் பணப் பரிமாற்றம்

செங்கோட்டை வெடிப்பில் TATP வெடிமருந்துடன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தும் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர் ஷாஹீன் மூலம், இந்தத் தீவிரவாதக் குழுவுக்கு சுமார் ₹20 லட்சம் பணம் வந்துள்ளது. இந்த நிதி டெல்லி தாக்குதலுக்கான திட்டமிடலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி குண்டுவெடிப்புக்கு முன், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 அன்று, பல நகரங்களில் 'D-6' என்ற குறியீட்டு பெயரில் இரட்டைத் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் அமைப்பினர் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முறியடிக்கப்பட்ட பின்பே டெல்லியில் தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டனர்.