உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியினப்பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியானநிலையில், அதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகிறது. இதன் எதிரொலியாக தற்போது INDIA கூட்டணிக்கட்சிகள் மத்திய அரசினை கண்டித்து நாடாளுமன்றம் வளாகத்தில் வரும் திங்கட்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், நாளை(ஜூலை.,23)சென்னையில் தாய்மையினை அவமதிக்கும் செயலினை தடுக்க பாஜக அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து எம்.பி.கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திமுக அறிவித்துள்ளது. தொடர்ந்து, மற்ற கட்சிகள் தரப்பிலும், மகளிர் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்க முடிவுச்செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி,நேற்றுமுன்தினம் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலையருகே நள்ளிரவு நேரத்தில் மணிப்பூர் சம்பவத்தினை எதிர்த்து தடைகளைமீறி மே17 இயக்கம் போராட்டத்தினை நடத்தியுள்ளது.
மெரினா மணல் பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
இதன் காரணமாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 50 பேரினை காவல்துறை கைது செய்து, அவர்கள்மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவும் செய்துள்னனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் சென்னை மெரினாவில் ஒன்று கூடி போராட்டம் நடத்தலாம் என்னும் ஓர் அழைப்பு இணையத்தில் பரவுவதாக உளவுத்துறை எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளதாம். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் வழக்கத்தினை விட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 4 நபர்களுக்கு மேல் ஒன்றாக வந்தால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னரே கடற்கரை பகுதிக்குள் அனுமதிக்கிறார்களாம். போராட்டக்காரர்கள் கடற்பகுதியில் ஒன்றுகூடி விடாமல் தடுக்க போலீசார் மணல் பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.