இந்திய மக்களுக்கு நற்செய்தி! US விசா நேர்காணல் காத்திருப்பு நேரம் 50 சதவிகிதமாக குறைப்பு !
அமெரிக்காவுக்கு முதல் முறையாக சுற்றுலா விசாவில் செல்பவர்களுக்கான நேர்காணல் காத்திருப்பு நேரம் 50% குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி புதன்கிழமை (ஜூன் 28) தெரிவித்தார். இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 10 லட்சம் சுற்றுலா விசாக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக ஐஐடி டெல்லியில் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது விரிவாக பேசிய எரிக் கார்செட்டி, "நாங்கள் ஏற்கனவே இதைச் செய்து வருகிறோம். இந்தியாவில் அமெரிக்க தூதரகம் முன்பு இருந்ததை விட, தற்போது அதிக விசாக்களைச் செயல்படுத்தி வருகிறோம். குறைந்தபட்சம் 2023இல் 10 லட்சம் விசாக்களை வழங்குவதாக இலக்கு நிர்னையித்துள்ளோம். அதில் ஏற்கனவே பாதி இலக்கை எட்டிவிட்டோம்." என மேலும் தெரிவித்தார்.
மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு இந்தியர்களுக்கான விசா நடைமுறையில் மாற்றம்
விசா செயல்முறையை விரைவாகவும் எளிமையாகவும் வழங்க இந்தியாவும் அமெரிக்காவும் அதிக முயற்சி எடுத்து வருகின்றன. அதன்படி சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்துடனான தனது உரையாடலின் போது, பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வல்லுநர்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டே தங்கள் எச்1பி பணி விசாக்களை புதுப்பிக்க முடியும் என்று அறிவித்தார். மேலும் பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்காவின் புதிய தூதரகங்கள் திறக்கப்படும் அறிவிப்பையும் அப்போது பிரதமர் மோடி வெளியிட்டார். இதற்கிடையே, இந்தியாவும் இந்த ஆண்டு சியாட்டிலில் புதிய தூதரகத்தை திறக்க உள்ளது. இது தவிர, அமெரிக்காவின் மேலும் 2 நகரங்களில் இந்திய துணை தூதரகங்கள் திறக்கப்படும்.