அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம்
பொதுத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாற்றியுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு அறிவித்தபடி ஜூன் 4 ஆம் தேதி நடைபெறாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அந்த இரண்டு மாநில சட்டப் பேரவைகளின் பதவிக்காலமும் ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 324, பிரிவு 172(1) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951இன் பிரிவு 15 ஆகிய சட்டங்களின் படி, சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
மக்களவை தேர்தல் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை
அந்த சட்டங்களை மேற்கோள் காட்டியுள்ள தேர்தல் ஆணையம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றியுள்ளது. மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு மட்டுமே தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒதேதிகளில் எந்த மாற்றமும் இல்லை.