விராலிமலை தொகுதி இடைத்தேர்தல்: தவெக வேட்பாளராக சி.விஜயபாஸ்கர்?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியல் களம் மிகவும் சுவாரஸ்யமாக மாறியுள்ளது. சமீபத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 5 காலியிடங்களுக்கான இடைத்தேர்தல் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், விராலிமலை தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சார்பில் சி. விஜயபாஸ்கர் களமிறங்குவார் என்பதை உணர்த்தும் வகையில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவரங்கள்
அரசு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது என்ன?
விராலிமலை தொகுதி எம்பியாகவும் எம்.எல்.ஏவாகவும் இருந்த சி. விஜயபாஸ்கர், சமீபத்தில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இதனால் விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விராலிமலையில் இன்று நடைபெற்ற அரசு அதிகாரப்பூர்வ விழாவில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "விஜயபாஸ்கர் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருக்கு எல்லா வித்தையும் தெரியும். எங்களை எல்லாம் இங்கே அழைத்து வந்து களத்திலே நிற்கப்போகிறார்; களத்தில் நிற்கப்போவது மட்டுமல்ல, வெற்றியும் காணப்போகிறார். வெற்றி பெறப்போவது மட்டுமல்ல, நம் தளபதிக்கு பின்னால் நின்று பணியாற்றப் போகிறார்" என்றார்.
சர்ச்சை
வெடிக்கும் விமர்சனங்களும் குதிரை பேர புகார்களும்
அரசு விழாவிலேயே கட்சித் தலைமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக தவெக வேட்பாளர் குறித்துப் பேசியிருப்பது எதிர்க்கட்சிகளிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்களை பதவி விலகச் செய்து, குதிரைப் பேரம் மூலம் தவெக தன்பக்கம் இழுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அண்மையில் தவெக-வில் தலைவர்கள் இணையும் நிகழ்வுகள் தலைமைச் செயலக வளாகத்திலேயே நடைபெற்றதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அரசு விழாவில் தேர்தல் பிரச்சாரம் போல் பேசியிருப்பது மேலும் சர்ச்சையைக் கூட்டியுள்ளது.