சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் குறிப்பிட்ட பிரிவினரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஜூன்-7ம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து, மீண்டும் கோயிலினை திறக்கவேண்டும் என்று கோரி விழுப்புரம் கரிப்பாளையம் பகுதியினை சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த புகார் மனுவில், குறிப்பிட்ட பிரிவினரை கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்படவில்லை, தீண்டாமையும் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதுவுமில்லாமல் ஆகமத்தை மீறி சீல் வைக்கப்பட்டுள்ளது. சட்ட-ஒழுங்கினை காரணம் காட்டி கோயிலுக்கு சீல்வைக்க அரசுக்கு அனுமதியில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட-ஒழுங்கு பிரச்சனை நடப்பதால் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது - நீதிபதிகள்
இந்த மனுவானது நீதிபதிகள் முன்னர் இன்று(ஜூன்.,21)விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், அறநிலையத்துறை மூலம் கோயிலுக்கு தக்காரை நியமித்தும் அவரால் அந்த கோயிலில் பொறுப்பேற்க முடியவில்லை என்றும், கோயில் திருவிழாவின் போது குறிப்பிட்ட பிரிவினை சேர்ந்தவரை கோயிலுக்குள் அனுமதிக்காமல் அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார். இதனை கேட்டறிந்த நீதிபதிகள், நடந்த பிரச்சனை குறித்து விசாரணை நடந்து வருவதால் இந்த விவகாரத்தில் அறநிலைத்துறை தான் முடிவு எடுக்க முடியும். எனவே இது குறித்து மனுதாரர் அறநிலையத்துறையினை அணுகலாம் என்று தெரிவித்தனர். மேலும் சட்ட-ஒழுங்கு பிரச்சனை நடப்பதால் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது என்று மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் விண்ணப்பத்தினை சட்டப்படி பரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.