Page Loader
நீட் மட்டுமே உலகம் இல்லை; மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியது என்ன?
பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு

நீட் மட்டுமே உலகம் இல்லை; மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியது என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
May 30, 2025
01:28 pm

செய்தி முன்னோட்டம்

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெள்ளிக்கிழமை (மே 30) பாராட்டு விழாவை நடத்தியது. இதில் கட்சித் தலைவரான நடிகர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, மாணவர்கள் தங்கள் பார்வையை ஒரு தொழில் பாதையைத் தாண்டி விரிவுபடுத்த வேண்டும் என்று ஊக்குவித்தார். நிகழ்வில் பேசிய விஜய், ஒரு குறிப்பிட்ட தேர்வை முன்னிறுத்தி அழுத்தம் கொடுக்கப்பட வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். "நீட் மட்டுமே உலகம் இல்லை; அதைத் தாண்டி பல வாய்ப்புகள் உள்ளன." எனக் கூறிய விஜய், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்கு புரிந்துகொண்டு அவர்கள் மீது அதிக அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வாக்கு

ஊழலில் ஈடுபடாதவர்களுக்கு வாக்கு

ஜனநாயக பொறுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த விஜய், மாணவர்கள் தங்கள் குடும்பங்களை புத்திசாலித்தனமாக வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார். "ஊழலில் ஈடுபடாதவர்களுக்கு மட்டும் வாக்களிக்க உங்கள் குடும்பங்களுக்குச் சொல்லுங்கள்" என்று அவர் கூறினார். தேர்தல்களில் பணத்தின் செல்வாக்கிற்கு எதிராக எச்சரித்த அவர், மாணவர்களுக்கு நினைவூட்டி, "கடந்த முறை, உங்கள் வாக்குகளை விற்க வேண்டாம் என்று நான் உங்களிடம் சொன்னேன். அடுத்த முறை, அவர்கள் வண்டி வண்டியாக பணத்தை கொட்டுவார்கள். நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் உங்கள் பணத்தைத் தான் திருப்பித் தருகிறார்கள்." என்றார். சாதி மற்றும் மதப் பிரிவுகளுக்கு எதிராகவும் பேசிய விஜய், சாதியத்தை போதைப்பொருளுடன் ஒப்பிட்டதோடு, யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் சாதிய அடையாளத்துடன் குறிப்பிடப்பட்டதற்கு, தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.