
Sorry வேண்டாம் நீதி வேண்டும்... அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு விஜய் தலைமையில் தவெக போராட்டம்
செய்தி முன்னோட்டம்
சிவகங்கை மாவட்டம் மடபுரத்தைச் சேர்ந்த கோயில் பாதுகாவலர் அஜித்குமார் காவலர்கள் அடித்துத் துன்புறுத்தியதில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவலர்கள் அடித்துச் சித்ரவதை செய்ததில் உயிரிழந்தார். இது தமிழகம் முழுவது பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியது. நடிகர் விஜய்யும் அஜித்குமாரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சென்னை சிவானந்தா சாலையில் தவெக நடத்திய போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நடிகர் விஜய், மன்னிப்பு வேண்டாம் நீதி வேண்டும் எனக் கோரி ஒரு ஆவேச உரை நிகழ்த்தினார்.
குற்றச்சாட்டு
ஆளும் திமுக மீது குற்றச்சாட்டு
ஆளும் திமுக அரசு மீண்டும் மீண்டும் காவல் மரணங்களைத் தடுக்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதுபோன்ற 24 மரணங்கள் திமுக நிர்வாகத்தின் கீழ் நடந்துள்ளன என்று சுட்டிக்காட்டினார். "முதல்வர் சாரி சொன்னார். அது போதாது. 24 பேரின் குடும்பங்களுக்கும் நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களா?" என்று அவர் கேட்டார். மேலும், "மன்னிப்பு போதாது, எங்களுக்கு நீதி வேண்டும்!" என்று அங்கு கூடியிருந்த தவெக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். வழக்கை சிபிஐக்கு மாற்றும் அரசாங்கத்தின் முடிவையும் கேள்வியெழுப்பிய நடிகர் விஜய், சிபிஐ பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். அஜித்குமார் வழக்கை உயர் நீதிமன்ற நேரடி மேற்பார்வையின் கீழ் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.