டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர் பதவியில் இருந்த பிபவ் குமாரை நீக்கியது விஜிலென்ஸ் துறை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமாரை விஜிலென்ஸ் இயக்குனரகம் பணிநீக்கம் செய்துள்ளது. அவரது நியமனம் "சட்டவிரோதமானது" என்றும் "செல்லாதது" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் கடந்த திங்களன்று குமாரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறப்புச் செயலாளர்(விஜிலென்ஸ்) ஒய்.வி.வி.ஜே.ராஜசேகர் பிறப்பித்த உத்தரவில், தற்காலிக நியமனம் தொடர்பான மத்திய அரசுப் பணி விதிகளை மீறி குமாரின் பணி நியமனம் செய்யப்பட்டதால், அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "...திரு. குமாரின் பணி நியமன நடைமுறை மற்றும் விதிகள் துல்லியமாக பின்பற்றப்படவில்லை, எனவே, அத்தகைய பணி நியமனம் சட்டவிரோதமானது மற்றும் செல்லாதது" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது