கர்நாடகா: பட்டப்பகலில் காரில் கடத்தப்பட்ட ஆசிரியையின் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியீடு
இன்று காலை கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு பள்ளி ஆசிரியையை மூன்று பேர் எஸ்யூவி காரில் கடத்தி சென்ற அதிர்ச்சி சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அர்பிதா(23), கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை, அர்பிதா வேலை செய்யும் பள்ளி அருகே அவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அங்கி எஸ்யூவி காரில் வந்த 3 பேர் அவரை காருக்குள் தள்ளி கடத்தி சென்றனர். இவை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அர்பிதாவின் தாயார் தன் மகளை தனது உறவினரான ராமு என்பவர் தான் கடத்தி இருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
விடுமுறை நாளில் பள்ளிக்கு சென்ற அர்பிதா
ராமுவும் அர்பிதாவும் 4 வருடங்களாக காதலித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கவிஞரும் தத்துவஞானியுமான கனகதாசாவின் பிறந்தநாளான கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அப்படி இருக்கையில், விடுமுறை நாளின் போது அர்பிதா எதற்காக பள்ளிக்கு சென்றார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.