7வது நாளாக தொடரும் உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணி: சிக்கியுள்ள 41 தொழிலாளர்ளுக்கு என்ன ஆகும்?
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சி இன்று காலை மீண்டும் தொடங்கியது. ஆனால், தற்போதைக்கு தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 7 நாட்காளாக அந்த தொழிலாளர்களை மீட்க மீட்பு குழுக்கள் அதிநவீன ட்ரில்லிங் இயந்திரங்களை வைத்து பாறைகளில் துளையிட்டு வந்தனர். எனினும், தோண்டும் பணி நடந்து கொண்டிருக்கும் போது பாதியிலேயே அந்த சுரங்கப்பாதை மீண்டும் மீண்டும் இடிந்து விழுந்ததால், இதுவரை துளையிடும் பணியை முழுமையாக முடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று 3 அடி அகலம் உள்ள ஒரு குழாயின் வழியாக தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று திடீரென்று மீட்பு பணி நடக்கும் இடத்தில் பெரும் சத்தம் கேட்டதால், மீட்பு பணிகள் நேற்று மதியம் நிறுத்தப்பட்டது.
செங்குத்தாக துளையிடுவது குறித்து ஆய்வு
மீண்டும் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விடக்கூடாது என்பதற்காக நேற்று அவசர அவசரமாக மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. எனினும், சுரங்கப்பாதைக்குள் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் இருந்து இதுவரை 24 மீட்டர் இடிபாடுகளை மட்டுமே மீட்புக் குழுவினரால் அகற்ற முடிந்தது. அமெரிக்க ஆஜர் இயந்திரத்தின் மூலம் ட்ரில்லிங் வேலை நடந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 25 டன் எடையுள்ள அமெரிக்க தயாரிப்பு இயந்திரம் இந்தூரில் இருந்து உத்தரகாண்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. கிடைமட்ட துளையிடல் வெற்றிபெறவில்லை என்பதால், சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஒரு சிறப்பு குழு தற்போது ஆய்வு செய்து வருகிறது.