தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு
தமிழகத்தில் கோடை காலம் மற்றும் கனமழை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக இருந்துவரும் தக்காளி சில்லரை கடைகளில் 1 கிலோ ரூ.90லிருந்து ரூ.110வரை விற்பனையானது. இந்த திடீர் விலை உயர்வினை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியக்கருப்பன் தெரிவித்ததையடுத்து, தமிழக அரசு பசுமைப்பண்ணை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே இன்று(ஜூலை.,2)மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.90க்கு விற்பனையான தக்காளி இன்று ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-130வரை விற்கப்படுகிறது. வரத்துக்குறைவு காரணமாக பெங்களூர்,ஓசூர் பகுதிகளிலிருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது.
வரலாறு காணாத விலை உயர்வு
இதனை தொடர்ந்து பீன்ஸ் விலையும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மிளகாய் விலையானது வரலாறு காணாத அளவிற்கு 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.50க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.180க்கு விற்கப்படுகிறது. நாட்டுக்கத்திரிக்காய் ஒரு கிலோ ரூ.120க்கும், கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சியின் விலை தற்போது ரூ.240க்கு விற்கப்படுகிறது. இதே போல் கேரட் ஒரு கிலோ ரூ.90, வரிகத்திரி ரூ.60, வெள்ளரிக்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.35, புடலங்காய் ரூ.50, இளவங்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.50, பல்லாரி ரூ.29, பூண்டு ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. காய்கறிகளின் கடும் விலை உயர்வால் இல்லத்தரசிகள் மற்றும் உணவகங்கள் நடத்துவோர் வேதனைக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.