Page Loader
சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் 
சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்

சரமாரியாக தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் - இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் 

எழுதியவர் Nivetha P
Aug 22, 2023
06:49 pm

செய்தி முன்னோட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சராமரியாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் பகுதியினை சேர்ந்த மீனவர்கள் செந்தில் அரசன் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரும் தங்களது சொந்த படகுகளில் நேற்று(ஆகஸ்ட்.,21)மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். 2 படகுகளில் மொத்தம் 7 பேர் மீன்பிடிக்க சென்ற நிலையில், ஆறுகாட்டுத்துறை கடற்கரை அருகே தென்கிழக்கு பகுதியில் சுமார் 22 மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு 3 பைபர் படகில் 9 பேர் கொண்ட இலங்கை கடற்படை கும்பல் திடீரென இவர்களது படகுகளை சுற்றிவளைத்துள்ளது.

தாக்குதல் 

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 6 மீனவர்கள் 

கத்தி, இரும்புக்கம்பி, கட்டைகள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்த அந்த கும்பல் தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், படகில் வைக்கப்பட்டிருந்த 800 கிலோ எடைகொண்ட மீன்பிடி வலை, பேட்டரி லைட், திசைகாட்டும் கருவி, போன்ற கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து விட்டு, மீனவர்களை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தினையடுத்து பலத்த காயங்களுடன் வேதாரண்யம் சென்றடைந்த மீனவர்கள் 7 பேரில் 6 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்களாம். குறிப்பாக பாஸ்கர் என்பவருக்கு 21 தையல் போடப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.