வண்டலூர் உயிரியல் பூங்கா - 2 மடங்காக உயர்ந்த நுழைவு கட்டணம்
சென்னை அருகேயுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவின் நுழைவு கட்டண உயர்வு இன்று(செப்.,9) முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதனிடையே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான இலவச நுழைவு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பூங்காவிற்கு வரும் பெரியோர்களுக்கு நுழைவு கட்டணமானது ரூ.115ல் இருந்து ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேன், டெம்போ, மினி பஸ், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு பார்க்கிங் கட்டணம் இனி மணி கணக்கில் இல்லாமல் நாள் கணக்கில் வசூலிக்கப்படும் என்றும் தெரிகிறது.
மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கு கட்டண சலுகை
மேலும், வீடியோ பதிவு செய்ய கட்டணமானது ரூ.500ல் இருந்து ரூ.750ஆகவும், சவாரி செல்லும் வாகனத்திற்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 5 முதல் 12 வயது மற்றும் 13 வயது முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கான நுழைவு கட்டணமானது ஒரு குழுவாக நிர்ணயிக்கப்பட்டு சலுகை அளிக்கப்பட்டு வசூல் செய்யப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் கட்டண சலுகை அளிக்கப்பட்டு வெறும் ரூ.20 நுழைவு கட்டணமாக வாங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.