வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு
வைகை எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலானதுm இனி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. வைகை எக்ஸ்பிரேஸ் ரயில் சேவை துவங்கியதிலிருந்தே ஸ்ரீரங்கம் மக்கள் கோரி வந்த கோரிக்கையானது இன்று(செப்.,7) தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு மூலம் நிறைவேறியுள்ளது என்றே கூறலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் செப்டம்பர் 16ம் தேதி முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக வைகுண்ட ஏகாதேசி தினங்களை முன்னிட்டு மட்டும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மேலும் சில நிறுத்தங்கள்
சென்னை எழும்பூரிலிருந்து மதியம் 1.20க்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான் உள்ளிட்ட வழித்தடங்கள் வழியே மதுரைக்கு இரவு 9.25க்கு சென்றடையும். அதனையடுத்து, மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 2.40க்கு வந்து சேரும் என்பது குறிப்பிடவேண்டியவை. இதனை தொடர்ந்து, மலைக்கோட்டை விரைவு ரயில், கல்லக்குடி, பழங்காந்தகம் ரயில் நிலையத்தில் இனி நின்று செல்லும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல், புகழூர் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை-மைசூரு விரைவு ரயில் நின்று செல்லும். மேலும், மன்னார்குடி-சென்னை எழும்பூர் விரைவு ரயில் இனி கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் நிற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.