
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்புக் குழுவினருக்குத் தலா ரூ.50,000 ஊக்கத் தொகை
செய்தி முன்னோட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒவ்வொரு பணியாளருக்கும் ரூ.50,000 ரொக்கம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 12ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
அந்த சமயத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கப்பாதைக்குள்ளேயே சிக்கி கொண்டனர்.
இந்நிலையில், 17 நாட்கள் நடந்து வந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
டோரிஸிஸ்ட்ஜ்
சிக்கியிருந்த தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி
இதனையடுத்து, 17 நாட்களாக சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருந்து மீட்கப்பட்ட மீட்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"தொழிலாளர்கள் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் ஒரு முறை முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சிக்கிய தொழிலாளர்களுக்கு நான் அறிவித்த ரூ.1 லட்சம் காசோலைகளாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் சுரங்கப்பாதைக்குள் நுழைந்து, தோண்டும் பணியில் பங்கேற்ற மீட்புப் பணியாளர்களுக்கு மாநில அரசிடமிருந்து 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்." என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட எலி துளை சுரங்க நிபுணர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் தாமி அறிவித்துள்ளார்.