Loading...
உத்தரகாண்ட் கேதர்நாத்-பத்ரிநாத் வழியில் பயங்கரம்: 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நொறுங்கியது
பத்ரிநாத் வழியில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நொறுங்கியது

உத்தரகாண்ட் கேதர்நாத்-பத்ரிநாத் வழியில் பயங்கரம்: 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நொறுங்கியது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
03:34 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் தாமில் இருந்து டேராடூன் நோக்கி இன்று மதியம் புறப்பட்ட தனியார் நிறுவனத்தின் டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் ஹெலிகாப்டர், சாமோலி மாவட்டம் ஜோஷிமத் அருகே மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி உட்பட 6 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் சிக்கியவர்களின் நிலை குறித்து மீட்புக் குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

வானிலை

மோசமான வானிலையால் தொடர்பு துண்டிப்பு

பத்ரிநாத் தாமில் இருந்து மதியம் 1:12 மணியளவில் புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர், ஜோஷிமத் பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது பலத்த பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுப்பாட்டு அறையுடனான ரேடியோ தொடர்பை இழந்தது.

ஹெலிகாப்டரில் ஹிமான்ஷு என்ற விமானியுடன் சந்திரகாந்த், ராஜஸ்ரீ, தினேஷ், ஆகாஷ் மற்றும் அதர்வ் ஆகிய 5 யாத்ரீகர்கள் பயணித்துள்ளனர்.

ஜோஷிமத் பகுதியில் உள்ள யானை மலை மற்றும் சாயி கிராமத்தின் பின்னணியில் உள்ள மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேடுதல்

வான்வழி மற்றும் தரைவழித் தேடுதல் வேட்டை

ஹெலிகாப்டர் மாயமான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சாமோலி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உடனடியாக தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்.

விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டறிய மேலும் 2 ஹெலிகாப்டர்கள் வான்வழித் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநிலப் பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் உத்தரகாண்ட் பொலிஸார் அடங்கிய துரித மீட்புக் குழுக்கள் பாகங்கள் கண்டறியப்பட்ட மலைப்பகுதியை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

தொடர் பனிப்பொழிவு மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், சாமோலி மாவட்ட நிர்வாகம் நிலவரத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

ADVERTISEMENT