₹300 மதிப்புள்ள நகைகளை ₹6 கோடிக்கு அமெரிக்கா டூரிஸ்டிடம் விற்ற ஜெய்ப்பூர் நகைக்கடைக்காரர் கைது
செரிஷ் என அடையாளம் காணப்பட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நகைக் கடை உரிமையாளரால் ஏமாற்றப்பட்டுள்ளார். நகைக்கடைக்காரர், வெறும் ₹300 மதிப்புள்ள போலி நகையை ₹6 கோடிக்கு அதிக விலைக்கு விற்றுள்ளார். ராஜேந்திர சோனி மற்றும் அவரது மகன் கவுரவ் ஆகியோருக்கு சொந்தமான ஜோஹ்ரி பஜார் கடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் விற்பனை செய்த நகைகளுக்கு போலியான நம்பகத்தன்மை சான்றிதழையும் அளித்து மோசடி செய்துள்ளார்.
அமெரிக்க கண்காட்சியில் இந்த மோசடி அம்பலமானது
அமெரிக்காவில் நடந்த கண்காட்சியில் செரிஷ் நகைகளை காட்சிப்படுத்தியபோது தான் இந்த மோசடி அம்பலமானது. மோசடியை உணர்ந்த அவர், சோனியையும் அவரது மகனையும் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றார். இருப்பினும், அமெரிக்க தூதரகம் தலையிடும்வரை அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவர்களை எதிர்கொண்ட போதிலும், அவரது குற்றச்சாட்டுகளை கடை உரிமையாளர்கள் நிராகரித்தனர். செரிஷின் முறையான புகார் பெறப்பட்டதும், குற்றம் சாட்டப்பட்டவர்களால் அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அமெரிக்க தூதரகத்தின் தலையீட்டிற்குப் பிறகுதான் உள்ளூர் போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். பிசினஸ் ஸ்டாண்டர்ட்படி , சோனி மற்றும் அவரது மகன் இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். போலி நம்பகதன்மை சான்றிதழ் வழங்கிய நந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.