Page Loader
இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை
அமெரிக்காவிற்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை வருட வருடம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை

எழுதியவர் Srinath r
Nov 29, 2023
10:25 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் இணை தூதரகங்கள், அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை, 1,40,000 மாணவர்களுக்கு விசாக்களை வழங்கி உள்ளது. "இந்தியாவில் உள்ள எங்கள் தூதரகங்கள் 140,000க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களை வழங்கியுள்ளன" என அமெரிக்க வெளியுறவுத்துறை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மேலும், அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான அமெரிக்க நிதியாண்டில், உலகம் முழுவதும் ஒரு கோடி புலம்பெயர்ந்தோர் அல்லாதவர்களுக்கான(Non-immigrant) வகை விசாக்களை வழங்கி உள்ளது. அதேபோல், உலக அளவில் 2015 ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிகபட்சமாக 8 மில்லியன் பார்வையாளர்கள் விசாவும், 2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிகபட்சமாக 6 லட்சம் மாணவர்களுக்கும் விசா வழங்கி உள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2nd card

இந்திய மாணவர்களுக்காக 7 நாட்கள் வேலை செய்யும் அமெரிக்க தூதரகங்கள்

அமெரிக்க விசா சேவைகளுக்கான துணை உதவி செயலாளர் ஜூலி ஸ்டஃப்ட், பிடிஐ உடனான நேர்காணலில், "இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் வாரத்தில் ஆறு, ஏழு நாட்கள் வேலை செய்து மாணவர்களின் வகுப்புகள் தொடங்குவதற்கு முன், மாணவர்கள் நேர்காணல் செய்யப்படுவதை உறுதி செய்கிறது" என தெரிவித்தார். இந்தாண்டு விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்ப்பதாகவும், இருப்பினும் காத்திருப்பு நேரத்தை குறைக்க பெரும் எண்ணிக்கையிலான, அமெரிக்க அதிகாரிகள் தூதரகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க தூதரகம், இந்தியர்களுக்கு ஒரு மில்லியன் புலம்பெயர்ந்தோர் அல்லாதவர்களுக்கான விசா வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும் கடந்த ஒரு வருட காலத்தில் 12 லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள், அமெரிக்காவிற்கு பயணம் செய்திருப்பதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

விசா சேவைகளுக்கான துணை உதவி செயலாளர் ஜூலி ஸ்டஃப்ட்