பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா
முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரியும், உலக வங்கியை வழிநடத்த இருக்கும் அமெரிக்க வேட்பாளருமான அஜய் பங்கா இன்று(மார் 23) இந்தியா வருகிறார். மேலும், இவர் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை டெல்லியில் சந்திக்க உள்ளார். அஜய் பங்காவின் "உலகளாவிய கேட்பு சுற்றுப்பயணம்" இந்திய பயணத்துடன் முடிவடைகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர், நன்கொடை அளிக்கும் நாடுகள் மற்றும் கடன் வாங்கும் நாடுகளுடன் உலக வங்கியின் பிரச்சனைகள் குறித்து விவாதித்தார்.
அஜய் பங்காவுக்கு ஆதரவு அளித்த இந்தியா
மார்ச் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் டெல்லி வர இருக்கும் அஜய் பங்கா, பிரதமர் மோடி, எஸ் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து இந்திய வளர்ச்சியின் முன்னுரிமைகள், உலக வங்கி மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் சவால்கள் குறித்து விவாதிப்பார் என்று அமெரிக்க கருவூலம் தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தலைவர் பதவிக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்காவை வேட்பாளராக நியமித்த போதே, மத்திய அரசு அவருக்கு ஆதரவு அளித்தது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பங்களாதேஷ், கொலம்பியா, எகிப்து, ஐவரி கோஸ்ட், கென்யா, சவுதி அரேபியா மற்றும் தென் கொரியா உட்பட பல நாடுகள் பங்காவிற்கு ஏற்கனவே தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.