ஜூன் 14 வரை ஆதாரில் இலவச மாற்றம்.. ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம்!
ஆதார் அட்டையில் வரும் ஜூன் 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் இலவசமாக மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தங்களுடைய ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும். அதன்படியே தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாக ஆதாரில் மாற்றம் செய்ய, அருகிலிருக்கும் ஆதார் மையத்திற்கு சென்று ரூ.50 செலுத்தி மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், தற்போது டெமோகிராபிக் தகவல்களை மட்டும் ஆன்லைன் மூலம் கட்டணம் ஏதுமின்றி மாற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது பெயர், விலாசம், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவையே டெமோகிராபிக் தகவல்கள் எனப்படுகின்றன.
எப்படி மாற்றம் செய்வது?
uidai.gov.in என்ற ஆதார் இணையப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் 'My Aadhar' என்ற டேபின் கீழ் 'Update your Aadhar' தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் தோன்றும் பக்கத்தில் உங்கள் ஆதார் எண் மற்றும் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை உள்ளீடு செய்து உங்கள் ஆதார் கணக்கில் உள்நுழைய வேண்டும். அதன்பின் நீங்கள் எந்த டெமோகிராபிக் தகவலை மாற்றம் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனை கிளிக் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவ்வளவு தான், அதன் பின் URN எண் ஒன்று உங்களுக்கு SMS வாயிலாக அனுப்பப்படும். அதனைக் கொண்டு நாம் மாற்றக் கோரிய தகவல் மாற்றப்பட்டுவிட்டதா எனத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த காலவரிசையைப் பகிரவும்