"ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகத்தை மட்டும் எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உத்தர பிரதேச மாணவர்கள்
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் (விபிஎஸ்பி) பல்கலைக்கழகத்தில் 18 முதலாம் ஆண்டு மருந்தக மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று மட்டும் எழுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் மூலம் இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் பணத்தை வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்கள் வழங்கியது தெரியவந்துள்ளது. விபிஎஸ்பி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் திவ்யன்சு சிங், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ஆர்டிஐ தாக்கல் செய்தார். விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து மாணவர்களின் பட்டியல் எண்களை வழங்க வேண்டும் என்று அவர் அதில் கோரி இருந்தார்.
இரண்டு பேராசிரியர்கள் இடைநீக்கம்
அவரது கோரிக்கையின் பேரில் மறுமதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற வாசகத்தை தவிர, ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா போன்ற கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. அந்த விடைத்தாள்களில் வேறு எதுவுமே எழுதப்படவில்லை. இந்த தகவல் வெளியானதும், இந்த ஊழலில் தொடர்புடைய வினய் வர்மா மற்றும் ஆஷிஷ் குப்தா ஆகிய இரண்டு பேராசிரியர்களை பல்கலைக்கழகம் உடனடியாக இடைநீக்கம் செய்தது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த துணைவேந்தர் வந்தனா சிங், "மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே நாங்கள் ஒரு குழுவை அமைத்தோம். அந்த கமிட்டி தனது அறிக்கையில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது" என்று கூறினார்.