ஆந்திரா, தெலுங்கானா வெள்ள பாதிப்பு; உடனடி நிவாரணமாக ரூ.3,448 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு
ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) உறுதியளித்தார். கிருஷ்ணா மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த கேசரப்பள்ளி பகுதியை மாநில அமைச்சர் அச்சன்நாயுடு, பாஜக மாநில தலைவரும் எம்பியுமான டி.புரந்தேஸ்வரி ஆகியோருடன் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் சந்தித்து அமைச்சர் பேசிய நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை அச்சன்நாயுடு, புரந்தேஸ்வரி மற்றும் மாநில வேளாண் துறை அதிகாரிகள் விளக்கினர்.
ஆந்திராவைத் தொடர்ந்து தெலுங்கானாவிற்கும் விசிட்
ஆந்திராவைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட சிவராஜ் சிங் சவுகான், "யாரும் ஏமாற்றமடையத் தேவையில்லை. உடனடி உதவிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்றார். தற்போது, மத்திய அரசின் பங்கையும் சேர்த்து, மாநில பேரிடர் நிவாரண நிதியின் (எஸ்டிஆர்எஃப்) கீழ், 3,448 கோடி ரூபாயை உடனடி உதவியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். உடனடி உதவிகளை வழங்கிய பின்னர், அடுத்த பயிருக்கு விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகளை வழங்குவது குறித்து அரசாங்கம் சிந்திக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். பயிர் சேதத்தை மதிப்பிட்டு உரிய இழப்பீடு மத்திய அரசு வழங்கும் என்றும் அமைச்சர் விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.