குரங்கம்மைக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆய்வு
மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) குரங்கம்மை நோயைப் பரப்பும் Mpox வைரஸ் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஜே.பி.நட்டா அதிகாரிகளுடனான கூட்டத்திற்கு தலைமை தாங்கி, நோய் பரவாமல் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார். தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் ஒரு குரங்கம்மை வைரஸ் பாதிப்பு கூட பதிவாகவில்லை. இந்த சந்திப்பின் போது, தற்போது இந்தியாவிற்கு நீடித்த பரவலுடன் கூடிய பெரிய அளவிலான பாதிப்பு அபாயம் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டது. தற்போது ஆப்பிரிக்காவில் தீவிரமாக பரவியுள்ள இந்த தொற்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியாவிலும் பரவ தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குரங்கம்மை நோயை உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிப்பு
உலக சுகாதார நிறுவனம் (WHO) முன்னதாக குரங்கம்மை தீவிரமாக பரவத் தொடங்கிய 2022 காலகட்டத்தில் அதை கட்டுப்படுத்தும் விதமான உலக பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. எனினும் பின்னர் மே 2023இல் அதை ரத்து செய்தது. இந்நிலையில், தற்போது இந்த தொற்றுநோயின் பரவல் ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் மிகவும் அதிகமாக உள்ள நிலையில், WHO மீண்டும் உலக பொது சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடல்களில் ஆங்காங்கு வீக்கம், காய்ச்சல், தசைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும். இதற்கென தனியாக சிகிச்சை முறை இல்லாத நிலையில், பெரியம்மை நோய்க்கான சில தடுப்பு மருந்துகள் இதற்காக சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.