"இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, இங்கிலாந்து துணை வெளியுறவு அமைச்சர் லார்ட் தாரிக் அகமது, இங்கிலாந்து விசா விதி மாற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
பிரிட்டன் அரசாங்கம் இந்திய மாணவர்களால் பயனடைந்துள்ளது என்றும் சமீபத்திய விசா தடைகள் ஓராண்டு ஆராய்ச்சி/முனைவர் பட்ட படிப்பு மாணவர்களுக்கு மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.
"இளங்கலை படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக வரும் மாணவர்கள் எப்போதும் வரவேற்கப்படுவார்கள்" என்று லார்ட் அகமது NDTVக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறி இருக்கிறார்.
"ஒரு வருடம் மட்டுமே வந்து சில சமயங்களில் தங்கள் ஆராய்ச்சியை முடிக்காமல் இருக்கும் ஆராய்ச்சி மற்றும் பிஎச்டி மாணவர்களுக்கான விசா விதிகளை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம்," என்று லார்ட் அகமது கூறினார்.
details
பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்: லார்ட் தாரிக் அகமது
காலிஸ்தான் ஆதரவாளர்களின் சர்ச்சைக்குப் பிறகு, லார்ட் அகமது இந்தியாவிற்கு வந்திருப்பது இந்தியா-இங்கிலாந்து உறவுகளில் நேர்மறையான ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
"சட்டப்பூர்வ குடியேற்றத்தால் பிரிட்டன் பயனடைகிறது. மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்தவே நாங்கள் விரும்புகிறோம். பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு அதிகமான மாணவர்கள் தேவை," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்திக்க இன்று டெல்லிக்கு அவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இங்கிலாந்து அமைச்சரின் இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
இதற்காக, ஹைதராபாத்தில் ஒரு சிறப்பு கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு புதுமையான ஸ்டார்ட்-அப்களை அவர் நேரில் காணவுள்ளார்.