ஐநா விருது வென்றது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்; இந்தியாவிற்கு மேலும் மூன்று விருதுகள்
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2024க்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு விருதை வென்றுள்ளது. தமிழகத்தில் 2021இல் பொறுப்பேற்ற திமுக அரசு, தொற்றா நோய்களான நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று சோதனை செய்து மருந்து வழங்கும் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல லட்சக் கணக்கானோர் பயன்பெற்று வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தொற்றா நோய்களுக்கான நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு 2024ஆம் ஆண்டுக்கான விருதை மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற சுகாதார ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு
இந்தியாவுக்கு 4 விருதுகள்
ஐநா சபையால் மூன்று பிரிவுகளில் மொத்தம் 14 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.இந்தியாவிற்கு மட்டும் நான்கு விருதுகள் வழங்கபட்டுள்ளன. இதில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிறப்பான சேவைகளை வழங்கியதற்காக தமிழக சுகாதாரைக்கு விருது வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் மூன்று நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலன் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதற்காக மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு (ஐசிஎம்ஆர்), உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான தேசிய நிறுவனம் ஆகியவற்றுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இது தவிர திருவனந்தபுரத்தில் உள்ள CDAC எனும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு பழங்குடியினருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உயர்தர மருத்துவ சிகிச்சையை கொண்டு சேர்த்ததற்காகவும் விருது வழங்கப்பட்டுள்ளது.