கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை
பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து கோஹினூர் வைரம், இந்திய சிலைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்களை மீட்பதற்கு இந்தியா ராஜதந்திரத்தை பயன்படுத்தி வருவதாக பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்று அரசாங்க வட்டாரங்கள் மறுத்துள்ளன. பிரிட்டனில் இருந்து ஆயிரக்கணக்கான தொல்பொருட்களை மீட்டெடுப்பதற்காக இராஜதந்திர வளங்கள் திரட்டப்படுகின்றன என்பது உண்மையான தகவல் அல்ல என்று இந்திய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செய்திகளில் மேற்கோள் காட்டப்பட்ட அதிகாரி கோஹினூர் பற்றி குறிப்பிடவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் பழங்கால பொருட்களை மீட்டெடுக்கும் செயல்முறையில் கவனம் செலுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோஹினூர் வைரம் விக்டோரியா மகாராணி கையில் எப்படி கிடைத்தது?
ராணி கமிலா தனது கிரீடத்திற்கு மாற்று வைரங்களைத் தேர்ந்தெடுத்த போதிலும், கடந்த வாரம் பிரிட்டனில் நடந்த முடிசூட்டு விழாவில் கோஹினூர் வைரம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. 105 காரட் கோஹினூர் வைரம் இந்திய ஆட்சியாளர்களின் கைகளில் இருந்த ஒரு மதிப்புமிக்க பொருளாகும். பிரிட்டிஷ் இந்தியாவை ஆட்சி செய்த போது, அந்த மதிப்புமிக்க வைரம் மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்திலிருந்து கிழக்கிந்திய கம்பெனியின் கைகளில் கிடைத்தது. அதன் பிறகு, அது விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் வெளியான டெய்லி டெலிகிராப் நாளிதழின் அறிக்கையில், கோஹினூரை திரும்ப பெறுவது இந்திய அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. அது தவறான அறிக்கை என்று இந்திய அரசாங்க அதிகாரிகள் தற்போது மறுத்துள்ளனர்.