
உடுமலைப்பேட்டை எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்
செய்தி முன்னோட்டம்
சிறப்பு துணை ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேல் கொலை வழக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, முக்கிய குற்றவாளி மணிகண்டன் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) அதிகாலை உடுமலைப்பேட்டை அருகே நடந்த போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஐ சண்முகவேல் (57), அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான சிக்கனூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் நடந்த தகராறை விசாரித்து சென்றபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த தகராறில் தொழிலாளி மூர்த்தி (66), அவரது மகன்கள் மணிகண்டன் மற்றும் தங்கபாண்டி ஆகியோர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. எஸ்எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது, அவரது கழுத்தில் வெட்டியதில் ஆழமான காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
தலைமறைவு
மூன்று பேரும் தலைமறைவு
சண்முகவேல் கொலையைத் தொடர்ந்து, மூன்று பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு தனிப்படைகள் அமைப்பட்டு தேடப்பட்ட நிலையில், மூர்த்தி மற்றும் தங்கபாண்டி ஆகியோர் திருப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர் மணிகண்டனும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், காவல்துறையினரின் கூற்றுப்படி, இன்று அதிகாலையில் நடந்த நடவடிக்கையின் போது, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்க மணிகண்டன் சிக்கனூரில் உள்ள உப்பாறு ஓடை அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காவல் துறையினரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற மணிகண்டன் மீது இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் மணிகண்டன் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.