உதய்பூர் தையல்காரரின் கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு
ராஜஸ்தான்: உதய்பூர் தையல்காரர் கன்ஹையா லால் டெலியினை கொலை செய்த கொலையாளிகளுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று குற்றம் சாட்டியுள்ளார். நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக வகுப்புவாத பதட்டத்தைத் தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர் நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகக் கூறி, தையல்காரரான கன்ஹையா லால், கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி, உதய்பூரில் உள்ள அவரது கடைக்குள் இரு ஆசாமிகளால் பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதற்காக நூபுர் ஷர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்தது.
தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட வழக்கு
அப்போது உதய்பூர் தையல்காரர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோர் சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு முதலில் உதய்பூரில் உள்ள தன்மண்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன் பின்னர், ஜூன் 29, 2022 அன்று, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு(தீவிரவாத தடுப்பு) மாற்றப்பட்டது. இந்நிலையில், ஜோத்பூரில் நேற்று நடந்த பிரச்சார பயணத்தின் போது பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேசிய புலனாய்வு முகமைக்கு(என்ஐஏ) பதிலாக ராஜஸ்தான் காவல்துறை இந்த வழக்கைக் கையாண்டிருந்தால், விசாரணையில் உண்மை வெளி வந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று கூறியதாவது:
அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.அப்போது எனக்காக திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை ரத்து செய்துவிட்டு நான் உதய்பூருக்கு புறப்பட்டேன். ஆனால், உதய்பூர் சம்பவத்தை அறிந்த பிறகும் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாஜகவின் பல முக்கிய தலைவர்கள் சென்றனர். சம்பவத்தன்று என்ஐஏ சம்பந்தமே இல்லாமல் இந்த வழக்கை எடுத்துக்கொண்டது. ஆனால் அதற்கு மாநில அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைத்தது. என்ஐஏ என்ன நடவடிக்கை எடுத்தது என்பது யாருக்கும் தெரியாது. எங்கள் காவல்துறை இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தால், குற்றவாளிகள் இப்போது நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
அசோக் கெலாட் மேலும் கூறியதாவது:
குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு உள்ளது. சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, வேறு சில வழக்கில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தபோது, சில பாஜக தலைவர்கள் அவர்களை விடுவிக்க போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். தேர்தல் தோல்வியை உணர்ந்த பாஜக வினோதமான கூற்றுக்களை முன்வைத்து வருகிறது. நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டங்கள் மற்றும் நாங்கள் கொண்டு வந்த சட்டங்கள் பற்றி அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. தேர்தலுக்கு முன் பிரச்சனைகளை கிளப்பவே அவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
கடந்த மாதம் பிரதமர் மோடி இந்த பிரச்சனை குறித்து கூறியதாவது:
"உதய்பூரில் என்ன நடந்தது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமானது. துணி தைக்க வேண்டும் என்று கூறி தையல் கடைகளுக்குச் சென்ற சிலர், சட்டத்துக்குப் பயப்படாமல் தையல்காரரின் கழுத்தை அறுத்துள்ளனர். ஆனால், காங்கிரஸ் இந்த வழக்கை வாக்கு சேகரிக்க அரசியலாக பார்த்து வருகிறது. நான் காங்கிரஸிடம் என்ன கேட்க விரும்புகிறேன் என்றால் உதய்பூர் தையல்காரர் கொல்லப்பட்டதற்குப் பிறகு வாக்கு வங்கி அரசியலைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்?" என்று பிரதமர் மோடி அக்டோபர் 2 ஆம் தேதி நடந்த பேரணியில் கூறினார்.