LOADING...
கரூர் சம்பவத்தில் கற்ற பாடம்; தவெக தொண்டரணிக்கு ஓய்வு பெற்ற ஐஜி தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு
தவெக தொண்டரணிக்கு ஓய்வு பெற்ற ஐஜி தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு

கரூர் சம்பவத்தில் கற்ற பாடம்; தவெக தொண்டரணிக்கு ஓய்வு பெற்ற ஐஜி தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 02, 2025
06:17 pm

செய்தி முன்னோட்டம்

கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது. கட்சியின் செயல்பாடுகள் ஒரு மாத காலம் முடங்கியிருந்ததாக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, சமீப நாட்களாக அக்கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஆரம்பத்தில் சுற்றுப்பயணம் மூலம் கட்சி கட்டமைப்பு வளரும் என்று விஜய் எதிர்பார்த்த நிலையில், தற்போது நிர்வாகக் குழுவை நியமித்து, அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளைக் கொண்டு கட்சியை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் கட்சி சார்பில் தொண்டரணியை ஒருங்கிணைக்க விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் மொத்தம் 468 தொண்டரணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

பனையூரில் ஆலோசனைக் கூட்டம்

தேர்வு செய்யப்பட்ட தொண்டரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மிக முக்கிய முடிவாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொண்டரணிக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஜி ரவிக்குமார் தலைமையில், ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி அசோகன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி சஃபியுல்லா உள்ளிட்ட உளவுத்துறை மற்றும் காவல்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொண்டரணியானது இனி மாவட்ட அளவில் தொடங்கி மாநில அளவில் நடைபெறும் தவெக கூட்டங்களை ஒருங்கிணைப்பதுடன், சட்டம் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்தும் பயிற்சி பெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.