கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களை இன்று மகாபலிபுரத்தில் சந்திக்கிறார் TVK தலைவர் விஜய்
செய்தி முன்னோட்டம்
கரூர் வேலாயுதம்பாளையத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் (TVK) பொதுக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பத்தினரை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று (அக்டோபர் 27) மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார். இதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் TVK நிர்வாகிகளால் நேற்றே மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். கட்சி நிர்வாகிகளின் ஏற்பாட்டின்படி, சுமார் 38 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு, அங்குள்ள சுமார் 50 அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தகவல்கள்
இந்த சந்திப்பு குறித்து சில தகவல்கள்
இன்று காலை 10 மணியளவில் தனியார் ரிசார்ட்டில் உள்ள ஒரு அரங்கில், 41 உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், விஜய் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து துக்கம் விசாரித்து, ஆதரவு அளிப்பார் என்று TVK நிர்வாகிகள் தெரிவித்தனர். முன்னதாக, விஜய் கரூருக்கே சென்று குடும்பத்தினரை சந்திக்க திட்டமிட்டிருந்தார். எனினும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக, அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, குடும்ப உறுப்பினர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு அரசியல் அழுத்தம் காரணமாக அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை எனவும் ஒரு சில செய்திகள் வெளியாகின. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே TVK சார்பில் தலா ரூ. 20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.