Loading...
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு! இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்
இடைத்தேர்தலுக்கான TVK வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு! இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2026
12:32 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் (தனி) சட்டசபை இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்களை கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, தாராபுரம் தொகுதியில் பி. சத்யபாமாவும், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும் TVK சார்பில் போட்டியிடுவார்கள். இவர்கள் இருவரும் ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றவர்கள். சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த நிலையில், தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை

முதலமைச்சர் விஜய்யின் கோரிக்கை

வேட்பாளர்களை அறிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே முதன்மை இலக்காகக் கொண்டு, களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும்" என முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, இத்தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9 அன்று தொடங்கிய நிலையில், திமுக சார்பில் மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமனும், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

அக். 6 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக மற்றும் தவெக இடையே முக்கோணப் போட்டி தீவிரமடைந்துள்ளது.

ADVERTISEMENT