தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை - கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்டது. இதுகுறித்த வழக்குகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஆலையிலுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவினை தாக்கல் செய்தது. இதற்கு அனுமதியளித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் வழிகாட்டுதல்படி கழிவுகளை அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து ஸ்டர்லைட்ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு செய்து அதற்கான அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டது. இதற்கான செலவுகளை நிர்வாகமே ஏற்கவேண்டும் என்றும் தமிழகஅரசு தெரிவித்திருந்தது. இதற்காக ஸ்டர்லைட் ஆலையின் அதிகாரிகள் 2 பேர் உள்பட 9 பேர் கொண்ட குழுவும் துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டது.
உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிப்பு
அதன்படி ஆலையிலுள்ள ஜிப்சம் போன்ற கழிவுகளை அகற்றுவது, கழிவுக்குழியிலிருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4ம்கழிவுக்குழியின் கரை உடைப்படாமல் அதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளல், பசுமை பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்படவேண்டும் என்று முடிவானது. இதனைத்தொடர்ந்து, ஸ்டர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றும் பணியானது இன்று(ஜூன்.,21)காலை 10 மணிக்கு துவங்கியது. ஆலையிலிருந்து அகற்றும் கழிவுகள் அனைத்தும் தொழிற்சாலையின் பக்கவாட்டில் அமைந்துள்ள வாசல் வழியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த வாசல் உள்ள பகுதியில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிகிறது. அதேபோல் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டு ஆலையில் அகற்றும் பணிகள் யாவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஸ்டர்லைட் நிறுவன வாசலில் பாதுகாப்பு பணியில் 24 மணிநேரமும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.