ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து வழக்குகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஆலையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலை சார்பில் இடைக்கால மனுவானது தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே ஸ்டர்லைட் ஆலையின் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஆலையில் உள்ள கழிவுகள் நீக்கப்படாமல் உள்ளதாக நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கழிவுகள் நீக்கப்படவில்லை எனில் ஆலையில் உள்ள உபகரணங்கள் வீணாகி விடும் என்று ஆலையினை ஆய்வு செய்த பின்னர் நிபுணர்கள் அளித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஸ்டர்லைட் ஆலையின் இதர கோரிக்கைகள் நிராகரிப்பு
மேலும் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசின் வழிகாட்டுதல்படி கழிவுகளை அகற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு செய்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான 9 பேர் கொண்ட குழுவினை துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான செலவுகளை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் ஆலையில் உள்ள செயலற்ற இயந்திரங்கள் அகற்ற, உதிரிபாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை ஆலைக்கு வெளியே கொண்டு வருதல், ஆலையின் பாதுகாப்பினை ஆய்வு மதிப்பீடு செய்தல் போன்ற ஸ்டர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.