LOADING...
மோடி மிகச் சிறந்த பிரதமர்; இந்தியாவுடன் வலுவான உறவு; அந்தர் பல்டி அடித்த டொனால்ட் டிரம்ப்
இந்திய உறவு குறித்து அந்தர் பல்டி அடித்த டொனால்ட் டிரம்ப்

மோடி மிகச் சிறந்த பிரதமர்; இந்தியாவுடன் வலுவான உறவு; அந்தர் பல்டி அடித்த டொனால்ட் டிரம்ப்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 06, 2025
07:33 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நீண்ட கால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மோடியை ஒரு சிறந்த பிரதமர் என்று பாராட்டிய டிரம்ப், இந்தியா - அமெரிக்கா உறவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்ட டிரம்ப், தற்போதுள்ள சில பதட்டங்கள் தற்காலிகமானவை என்றும் தெரிவித்தார். இது குறித்து பேசிய டிரம்ப், "நான் எப்போதும் மோடியுடன் நண்பனாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் அவர் இந்த குறிப்பிட்ட தருணத்தில் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை" என்று தெரிவித்தார். இருப்பினும், மோடியின் எந்தச் செயல் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதை அவர் விளக்கவில்லை.

கருத்து வேறுபாடுகள்

சர்வதேச உறவுகளில் கருத்து வேறுபாடு சகஜம்

சர்வதேச உறவுகளில் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு என்றும், அவை இரு நாடுகளின் உறவின் வலிமையைக் குறைத்துவிடாது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய டிரம்ப், பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், அதன் காரணமாக இந்தியா மீது 50% வரி விதித்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், இந்தப் பிரச்சனைகள் தாற்காலிகமானவை என்றும், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு வலுவாக உள்ளது என்றும் அவர் கூறினார்.