மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு பெரும் வெற்றி
மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற உள்ளாட்சியின் மூன்று அடுக்குகளிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ்(TMC) பெரும் வெற்றி பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 3,317 கிராம பஞ்சாயத்துகளை கொண்ட மேற்கு வங்கத்தில் 2,552 கிராம பஞ்சாயத்துகளிலும், 232 பஞ்சாயத்து சமிதிகளிலும், 12 ஜில்லா பரிஷத்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 212 கிராம பஞ்சாயத்துகளிலும், 7 பஞ்சாயத்து சமிதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. "TMC மீதான மக்களின் அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மாநில மக்களின் இதயத்தில் TMC மட்டுமே உள்ளது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது" என்று தன் முகநூல் பதிவில் அம்மாநில முதல்வரும் TMC கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
696 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது
இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. 63,229 கிராம பஞ்சாயத்து இடங்கள், 9,730 பஞ்சாயத்து சமிதி இடங்கள் மற்றும் 928 ஜில்லா பரிஷத் இடங்கள் உட்பட 74,000 இடங்களுக்கான மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பொது தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை கணிக்கக்கூடிய மிக முக்கிய தேர்தலாக இந்த உள்ளாட்சி தேர்தல் பார்க்கப்பட்டது. இதனால், இந்த உள்ளாட்சி தேர்தலின் போது பெரும் வன்முறைகள் வெடித்தன. இதில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும், தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றசாட்டை அடுத்து 696 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.