சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்; டிராபிக் ஜாம்-ஐ தவிர்க்க புது ஐடியா
சென்னையில், 100க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதாலும், வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் என்பது சாதாரணமாகி விட்டது. அதிலும், மழை காலங்கள், வார இறுதி நாட்களிலும், பண்டிகை தினங்கள் மற்றும் பொது விடுமுறைகள் அன்றும் அதிகளவு பேருந்துகளும் இயக்கப்படுவதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு தீர்வு காணும் நோக்குடன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற திட்டமிட்டுள்ளது.
Embed
குறிப்பிட்ட சில பேருந்து நிறுத்தங்களை மட்டும் மாற்ற திட்டம்
பேருந்து நிறுத்தங்களை மாற்ற நடவடிக்கை எடுத்து, அதற்கான ஆய்வுகளை முடித்துள்ளது போக்குவரத்து கழகம். குறிப்பாக சிக்னல் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அருகே, வாகன போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைக்க இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், சிக்னல் மற்றும் மேம்பாலங்களுக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை, 100 மீட்டர் தள்ளி வைப்பது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பாரிமுனை-முகப்பேர் (7M), வடபழனி-தரமணி (5T)வழித்தடங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில், சென்னையில் உள்ள அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றப்படும் என தெரிய வருகிறது.