பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் ஆடி காரை கைப்பற்றியது புனே காவல்துறை
சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பயன்படுத்திய ஆடி காரை புனே போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி, தனியார் காரில் விஐபி நம்பர் பிளேட்டுடன் சிவப்பு மற்றும் நீல சைரனை பூஜா கேத்கர் பயன்படுத்தியுள்ளார். மேலும், அனுமதியின்றி தனது வாகனத்தில் மகாராஷ்டிரா அரசு என்ற போர்டையும் அவர் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மொத்தம் 21 போக்குவரத்து விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்த வாகனத்திற்கு ரூ.26,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காரின் ஆவணங்கள் இதுவரை போக்குவரத்து துறையிடம் சமர்ப்பிக்கப்படவில்லை
அந்த காரின் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு உரிமையாளர்களுக்கு போக்குவரத்துக் காவல் துறை நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, சதுஷ்ரிங்கி போக்குவரத்து காவல் நிலையத்தில் நேற்று இரவு, கேத்கரின் குடும்ப ஓட்டுநர் காரின் சாவியை ஒப்படைத்தார். ஆனால், அதற்கான ஆவணங்கள் இதுவரை போக்குவரத்து துறையிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. 34 வயதான பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி புஜா கேத்கர், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஆக்ரோஷமான நடத்தை மற்றும் UPSC தேர்வில் நடந்த பிற முறைகேடுகள் தொடர்பாக போலீசாரின் கண்காணிப்பில் உள்ளார். தனக்கு ஒரு தனி அறை, கார், குடியிருப்பு மற்றும் ஒரு பியூன் வழங்க வேண்டும் என்று பதவியில் சேர்வதற்கு முன்பே பூஜா கேத்கர் பலமுறை கேட்டு பிற அதிகாரிகளை சங்கடப்படுத்தியாயதாக கூறப்படுகிறது.