ரயில் மறியல் எதிரொலி - கே.எஸ்.அழகிரி உள்பட 238 பேர் மீது வழக்குப்பதிவு
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார். "எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள்" என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக.,எம்.எல்.ஏ.,புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கினை சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்திருந்தார். அதன்படி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று சூரத்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. இத்தீர்ப்பினை நிறுத்தி வைக்குமாறு ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று(ஜூலை.,7)வெளியானநிலையில், ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறைத்தண்டனையினை நிறுத்திவைக்க மறுப்பு தெரிவித்த குஜராத் நீதிமன்றம், அவரது மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடிச்செய்து உத்தரவு பிறப்பித்தது.
3 பிரிவுகளில் வழக்கு பதிவு
இதனையடுத்து ராகுல் காந்திக்கு அநீதி நேர்ந்ததாக கூறி சென்னை எழும்பூரில் ரயிலினை மறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களும் திரளாக திரண்டு இதில் பங்கேற்றனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் 238 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. முன்னதாக சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியபொழுது கே.எஸ்.அழகிரி கும்பகோணத்தில் 4 பேருடன் சேர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.