சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம்
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வீடியோ அல்லது போட்டோவை எடுத்து போக்குவரத்து காவல்துறைக்கு நேராக சமூக வலைத்தளம் மூலமாக இனி புகார் அளிக்கலாம். போக்குவரத்து காவல்துறையின் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் (9003130103) போன்ற எந்த சமூக வலைதளத்தின் மூலமாகவும் இனி புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகவும் அதிகம். இந்த நெரிசலால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுக்க அரசும் காவல் துறையினரும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது புதிதாக வந்து இறங்கி இருப்பது தான் இந்த சமூக வலைத்தளம் மூலம் புகார் அளிக்கும் வசதி.
சென்னையின் எதிர்காலம் உங்கள் கையிலும் இருக்கிறது
இனி எந்த மாதிரியான போக்குவரத்து விதிமீறல் என்றாலும் முதலில் உங்கள் போனை எடுத்து ஒரு புகைப்படத்தை எடுங்கள் அல்லது அதை ஒரு வீடியோவாக எடுங்கள். அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும். மற்ற வேலைகளைப் போக்குவரத்து காவல் துறையினர் பார்த்துக்கொள்வர். மறக்காமல் அந்த ஆதாரங்களை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினரின் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் (9003130103) போன்ற ஏதாவது ஒரு சமூக வலைத்தளங்களுக்கு அனுப்பிவிடுங்கள். உங்கள் ஒரு புகைப்படத்திற்கு ஓராயிரம் உயிர்களைக் காக்கும் சக்தி இருக்கிறது.