அமைச்சராக பதவியேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு அறிவுரை கூறிய தந்தை டி.ஆர்.பாலு
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்னும் உறுதியான தகவல் வெளியானது. அதன் பின்னர் மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 11ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் பதவி பிராமணம் செய்து வைக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி தற்போது அவர் இன்று சென்னை கிண்டி ராஜபவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 10.30 மணியளவில் பதவியேற்பு விழா நடந்தது. இவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
துறை குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், டிஆர்பி ராஜாவின் தந்தையும் எம்.பி.'யுமான டி.ஆர்.பாலு அவர்கள் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தனியார் செய்தி தொடர்பான தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டி.ஆர்.பாலு, முதல்வரின் அறிவுரைப்படி சிறப்பாக பணியாற்றி தமிழ்நாட்டினை மேம்படுத்த வேண்டும். அமைச்சராக பதவியேற்றுள்ள டிஆர்பி ராஜா சிறப்பாக பணியாற்றி முதல்வரின் உள்ளத்தில் இடம் பெற வேண்டும். என் மகனை அமைச்சராக்கிய முதல்வருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். டிஆர்பி ராஜா பதவியேற்றுள்ள நிலையிலும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறை குறித்த அறிவிப்பு ஏதும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.