பற்களை பிடுங்கிய விவகாரம் - அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கோரும் சிபிசிஐடி
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் ஏஎஸ்பி பொறுப்பில் இருந்தவர் பல்வீர் சிங். இவர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரும் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கி தண்டனையளித்து வருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வீர் சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து உயர்மட்ட விசாரணை குழு பரிந்துரை செய்ததன் பேரில் இவ்வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கையினை உயர்மட்ட விசாரணை குழு அதிகாரி அமுதா மற்றும் அம்மாவட்ட சார்-ஆட்சியர் ஆகியோர் அளிக்கவேண்டும் என்று அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இறுதிக்கட்டத்தினை நெருங்கிய விசாரணை - சிபிசிஐடி
அந்த மனு மீதான விசாரணை இன்று(செப்.,28) நடந்த நிலையில், இதற்கான பதில் மனுவினை சிபிசிஐடி-ன் விசாரணை அதிகாரியான சங்கர் தாக்கல் செய்துள்ளார். மேலும் அவர், இதுகுறித்த விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தினை நெருங்கியுள்ளது என்று கூறியுள்ளார். அதேபோல், குறிப்பிட்ட காவல்நிலையத்தில் சிசிடிவி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரி அமுதாவின் அறிக்கையும், குற்றப்பத்திரிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் இந்த வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ளதால் இதன் அடுத்தகட்ட விசாரணையினை மேற்கொள்ள யுபிஎஸ்சி மற்றும் தமிழக அரசு அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.