பற்களை பிடுங்கிய விவகாரம் - சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 பேர் இடமாற்றம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்துவந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார். இவர் காவல்நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்துவருவோரின் பற்களை பிடுங்குவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுவரை சிபிசிஐடி போலீசாரால் இந்த விவகாரத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதில் பாதிக்கப்பட்டோர்,அவர்களது உறவினர்கள்,சாட்சியங்களை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் அவர்கள் யாரும் விசாரணைக்கு வரவில்லை. இதனால் அவர்கள் வீடுகளுக்கே சென்று போலீசார் தங்கள் விசாரணையினை மேற்கொண்டுள்ளார்கள். மேலும் சம்பந்தப்பட்ட சரகத்தில் பணியாற்றும் சில போலீசார், உதவிபோலீஸ் சூப்பரண்ட் பலவீர்சிங்கின் ஜீப் ட்ரைவர் உள்ளிட்ட 4 போலீசாருக்கு சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் நால்வரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்கள்.
போலீஸ் சூப்பரண்ட் சிலம்பரசன் அதிரடி உத்தரவு
இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பரண்ட் சிலம்பரசன் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். அதில் அம்பை உட்கோட்ட காவல்நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள், முதல் மற்றும் இரண்டாம்நிலை காவலர்கள் என மொத்தம் 24போலீசார் மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் காவல் நிலையங்களில் காவல்துறையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சப் இன்ஸ்பெக்டர்கள் முருகேஷ், ஆபிரகாம் ஜோசப், சக்தி நடராஜன், பாலசுப்ரமணியம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஸ்வரன், ரவி, பத்மநாபன், மகாராஜன் மற்றும் காவலர்கள் கணேசன், சேர்மன்துரை, வசந்த், கலைவாணி, பார்வதி, சுடலை, ஜெயராமன், அபிராமவள்ளி, ஆரோக்கிய ஜேம்ஸ், ஸ்டீபன், சதாம் உசேன், போக பூமன், விக்னேஷ், மணிகண்டன், சந்தானகுமார், ராஜ்குமார் ஆகிய 24 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.