
தமிழக எல்லையில் கொட்டப்படும் கேரள மருத்துவக்கழிவுகள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
கேரளா மாநிலத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதனால் தங்கள் மாநிலத்தில் சேரும் மருத்துவ கழிவுகள், இறைச்சி, மீன் உள்ளிட்ட கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள ஆற்றங்கரையோராம், மலையோரம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டுகின்றனர்.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தினை சேர்ந்த களியல், நெட்டா, களியங்கா விளை, உள்ளிட்ட பகுதிகளில் தினமும் லாரியில் மாட்டின் எலும்பு கழிவுகள், மீன் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
பன்றி பண்ணைகளுக்கு உணவுக்காக எடுத்துச்செல்லப்படும் பொருட்கள் என்று கூறி லாரியில் எடுத்துச்செல்லும் இந்த கழிவுகளில் இருந்து வரும் துர்நாற்றத்தால் மக்கள் அந்த லாரியை விரட்டி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்ற கழிவுகள் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சப்படுகின்றனர்.
கழிவுகள்
தமிழக அரசு சட்டத்தினை வலுப்படுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் - சமூக ஆர்வலர்
தொடர்கதையாக உள்ள இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு இதுவரை எவ்வித கட்டுப்பாடுகளை கொண்டு வராமல் உள்ளது.
தற்போது கேரளாவில் நிபா வைரஸ் பரவிவரும் நிலையில், எல்லைகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும், கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிவரும் வாகனங்கள் தப்பி தமிழக எல்லைக்குள் நுழைந்து விடுகிறது.
இதனை தடுக்க கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அண்மையில் எம்.பி.விஜய் வசந்த் மாவட்ட நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர் ஹேமந்த் லால், கேரளாவில் இருந்து சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் இந்த கழிவுகளை ஏற்றிவருவதே தமிழக ஓட்டுநர்கள் தான் என்பது வெட்கக்கேடான விஷயமாகும்.
தமிழக அரசு இதுபோன்ற குற்றங்களை செய்வோருக்கு சட்டத்தினை வலுப்படுத்தி தண்டனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.