கிலோவிற்கு 10 ரூபாய் உயர்ந்த தக்காளி விலை; 300 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை
கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த விலை உயர்வு தமிழ்நாடு மாநிலம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது என்று செய்திகள் வெளியானது. கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாகவே தக்காளி விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். இதனிடையே தக்காளியினை மக்களுக்கு குறைவான விலையில் விற்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான், தக்காளியினை சென்னையில் உள்ள 90 ரேஷன் கடைகளில் சோதனை முயற்சியில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.
மொத்த விற்பனையில், தக்காளி ஒரு கிலோவிற்கு ரூ.130 என விற்பனை
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர், இந்த விலையேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தினை நடத்தினார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த கூட்டத்தின் இறுதியில், மேலும் 300 நியாயவிலை கடைகளில், தக்காளி விற்பனையினை விரிவுபடுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று(ஜூலை.,12) முதல் தமிழகம் முழுவதும் உள்ள 300 ரேஷன் கடைகளில், குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, சற்றும் விலை குறையாமல் இருக்கும் தக்காளி விலை, இன்றும் ஒரு கிலோவிற்கு ரூ.10 உயர்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், தக்காளி ஒரு கிலோவிற்கு ரூ.130 என விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சில்லரை கடைகளில் இதன் விலை மேலும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.