சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை மேலும் ரூ.30 அதிகரிப்பு
கடந்த சிலநாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது. கனமழை மற்றும் வரத்துக்குறைவு காரணமாக தக்காளியின் விலை தற்போது உச்சத்தினை தொட்டுள்ளது. சில இடங்களில் தக்காளி விலை ரூ.150க்கு மேல் விற்பனையாகிறது என்றும் கூறப்படுகிறது. தக்காளி சாகுபடி சீரான நிலையினை அடைய இன்னும் 2-3வாரங்கள் ஆகலாம் என்று தெரிகிறது. இதனால் மக்கள் நலன்கருதி தமிழகஅரசு தங்களால் இயன்ற முயற்சியினை செய்து மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதிலொன்று தான் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை. சோதனை முயற்சியாக சென்னையில் மட்டும் 90 ரேஷன்கடைகளில் தக்காளி கடந்த 2 நாட்களாக ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
பச்சை மிளகாய் விலையும் இரு மடங்கு அதிகரிப்பு
அதன்படி, ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே என்னும் வீதத்தில் காலை 1-2 மணிநேரம் மட்டுமே இந்த விற்பனை நடந்துவருகிறது. இதனிடையே, நேற்று(ஜூலை.,7)தக்காளி விலையானது சற்றுக்குறைந்து ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனையானது. ஆனால் தற்போது மீண்டும் இன்று(ஜூலை.,8) ஒரு கிலோ தக்காளி ரூ.30 அதிகரித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90ல் இருந்து ரூ.120ஆக அதிகரித்து விற்கப்படுகிறது. சிறிய ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நேற்று வரை ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனையான பச்சைமிளகாய் இன்று ரூ.100க்கு விற்கப்படுகிறது. அதே போல் பீன்ஸ் ஒரு கிலோக்கு ரூ.30 அதிகரித்து ரூ.110க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.